சமையல் எரிவாயு விலை உயர்வை சமாளிக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடந்த சில மாதங்களாக மலை போல் உயர்ந்து வந்தது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. குறிப்பாக சமையல் சிலிண்டர் விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உயராமல் இருந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும், எதிர்பார்த்தது போலவே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மார்ச் 22 முதல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருட்கள் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.965.50ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்க முடியாது.” என்று அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
மேலும், “பெட்ரோல், டீசல் விலைகளும் 136 நாட்களுக்குப் பிறகு லிட்டருக்கு முறையே 76 காசுகளும், 77 காசுகளும் இன்று உயர்த்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களிலும் இதே அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், மொத்தமாக லிட்டருக்கு ரூ.25 வரை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 102.58 ஆகவும், டீசல் விலை ரூ.92.65 ஆகவும் உயர்ந்திருக்கும் நிலையில், விலை உயர்வு தொடர்வதை மக்களால் சமாளிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.” என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment