இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்துக்கு இன்றுதான் கொரோனா இல்லாத நாளாக அமைந்துள்ளது.
கொரோனா எனும் கொடிய வைரஸ் 2020 ஜனவரியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியாவிலும் பரவிய வைரசின் தாக்கம் தமிழகத்திலும் அதிகமாக இருந்தது. தேசிய அளவில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான மாநிலங்களில் டாப் ஐந்து இடங்களி்ல் தமிழகம் இருந்தது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கி்ல் உயிர் பலி வாங்கிய கொரோனா முதல் அலையின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க 2020 மார்ச் இறுதியில் இருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் அமலில் இருந்த பொது முடக்கத்தின் பயனாக முதல் அலையில், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய அளவில் உயிர் பலிகள் இல்லை.
அப்பாடா தப்பித்தோம் என்று, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பொது முடக்க விதிமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு 2020 இல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அந்த வருட முடிவில் அனேகமாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன.
சில மாதங்கள் கழித்த பிறகு. 2021 ஏப்ரலில் டெல்டா வைராக உருமாறிய கொரோனா இரண்டாம் அலையாக வீசத் தொடங்கியது. முதல் அலையை விட தீவிரமான அதன் தாக்குதலின் விளைவாக, சில மாதங்களிலேயே தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.
இதன் காரணமாக மீண்டும் லாக்டவுன் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அவையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இதோடு கொரோனாவின் விளையாட்டு முடிந்துவிட்டதென்று பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்த நிலையில், ஓமைக்ரானாக உருமாறிய கொரோனா, மூன்றாவது அலையாக வீசத் தொடங்கியது. 2021 டிசம்பர், ஜனவரி மாதங்களில் இதன் தாக்கம் தீவிரமாக இருந்தபோதும், தடுப்பூசியின் பயனாத இரண்டாவது அலையின் அளவுக்கு அதனால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த இயலவில்லை.
கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், மாநிலம் முழுவதும் இன்று 112 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 42 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அ்தேசமயம் மதுரை, தூத்துக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதைவிட மகிழ்ச்சிகரமான தகவல் என்னவென்றால் சென்னை, கோவை உட்பட தமிழ்நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் கொரோனாவால் இன்று உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என்பதுதான். இதன் மூலம், கிட்டதட்ட இரண்டே கால் ஆண்டுகளுக்கு பிறகு, கொரோனா மரணங்கள் நிகழாத நாளாக தமிழகத்துக்கு இன்றைய தினம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment