வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக மணல் மட்டும் கனிம பொருட்களை கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், வெயில், மழையில் பாதிப்புக்குள்ளாகிறது என்றும் இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவற்றை முடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை முடக்கம் செய்யும் நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், வாகன உரிமையாளர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நமது தாய் மண்ணை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் எந்த காரணத்தை சொல்லியும் கனிம வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும் எனவும், நம் பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்த நீதிபதி, சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
No comments:
Post a Comment