உக்ரைனுக்கு அளவே இல்லாமல் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கோரிக்கை.
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரைன் வெற்றி பெற உலக நாடுகள் குறிப்பாக நேட்டோ நாடுகள் மிகப் பெரிய உதவியை செய்ய வேண்டும். அளவே இல்லாமல் ஆயுதங்களைக் கொடுத்தாக வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனும் தொடர்ந்து சமாளித்தபடி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு முழு அளவில் உதவி செய்ய தீர்மானித்து களம் இறங்கவுள்ளன.
இதை எதிர்பார்த்துத்தான், ரஷ்யாவின் இருப்புக்கே ஆபத்து நேரிட்டால் அணு ஆயுதத்தைக் கையில் எடுப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு வேளை ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஐரோப்பிய கண்டத்துக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் அஞ்சப்படுகிறது. ஆனால் போர் உக்கிரமாகி, உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு கிடைத்தால் ரஷ்யாவுக்கு அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்கிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே அமெரிக்காவின் திட்டத்தை ரஷ்யாவால் முறியடிக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு மிகப் பெரிய அளவில் ஆயுத உதவியை செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளைச் செய்ய வேண்டும். நேட்டோ நாடுகள் அளவே இல்லாமல் ஆயுதங்களை சப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் உக்ரைனையும், மக்களையும் காப்பாற்ற முடியும்.
ரஷ்யா தற்போது பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இன்று காலை பாஸ்பரஸ் குண்டுகளை அவர்கள் வீசியுள்ளனர். அதில் பல குழந்தைகள், மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேட்டோ எங்களது மக்களைக் காக்க இன்னும் உறுதியான நடவடிக்கையை எடுக்காமல் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய, வலுவான பாதுகாப்பு கூட்டணி நேட்டோ என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. உலகம் அதைக் காண காத்திருக்கிறது. குறிப்பாக உக்ரைன் மக்கள், நேட்டோவின் ஆக்ஷனுக்காக காத்திருக்கிறார்கள் என்றார்.
இதற்கிடையே, நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் ரஷ்யா மிகப் பெரிய தவறு செய்து விட்டதாக கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்ததன் மூலம் அதிபர் விலாடிமிர் புடின் மிகப் பெரிய தவறிழைத்து விட்டார். இது வரலாற்றுத் தவறு என்று அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நேட்டோ தலைவர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு கூடியுள்ளது.
No comments:
Post a Comment