ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
மாதவிடாய் வருகிறதா, சிறுநீர் கழிப்பு ஒழுங்காக உள்ளதா உள்ளிட்ட கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கேட்டு புள்ளி விவரங்களை சேகரிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ள உத்தரவு ஒன்று ஆசிரியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. மாணவர்களின் உடல் நலன் மற்றும் இடைநிற்றல் ஏற்படுவதற்கான காரணங்களை அறியும் பொருட்டு பல்வேறு தகவல்களை திரட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா? மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்கின்றதா? மாணவர்கள் பான் ஜர்தா போடும் பழக்கம் உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு அவ்விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தேர்தல் காலப் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் போன்ற பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் மாணவர்களின் விவரங்களை சேகரிப்பது, வருகை பதிவேடு பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பது, தேர்வு வினாத்தாள்களை சமர்ப்பிப்பது, பள்ளி மேஜை நாற்காலி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்கள் உடல் நலன் சார்ந்த அந்தரங்க கேள்விகளையும் கேட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
No comments:
Post a Comment