பல்வேறு அரசுத் துறை பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை பொது தகுதித் தேர்வு வாயிலாக தெரிவு செய்வதற்கான ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தை உருவாக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய நவீன உலகில், பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆன்லைனில் எழுத்து தேர்வும், வீடியோ காலில் நேர்முக தேர்வும் நடத்தும் நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்து வருகிறது. மத்திய அரசுத் துறைகளிலும் இந்த நடைமுறை விரைவில் வரவுள்ளது.
இதுதொடர்பாக. மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
மத்திய அரசு பணிகளுக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் அமைப்பு உள்ளிட்டவை வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசுப் பணிகளுக்கு தகுதியுள்ளோரை தேர்வு செய்வதற்கு ஆன்லைன் வாயிலாக பொது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தகுதித் தேர்வை நடத்துவதற்கான பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்டவை நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்று அமைச்சர் ஜிஜேந்திர சிங் கூறினார்.
ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சேர, நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் நீட் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புவோருக்கு செக் வைக்கும் விதமாக பொது தகுதி நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment