பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவு நாட்டுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளவுள்ளது.
சாலமன் தீவுகளுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளதாம் சீனா. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சாலமன் தீவுகளில் புதிய கடற்படைத் தளத்தை சீனா அமைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் தகவல்கள் தற்போது கசிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள குட்டித் தீவு நாடுதான் சாலமன் தீவுகள். 6 பெரிய தீவுகளையும், 900 குட்டித் தீவுகளையும் உள்ளடக்கிய நாடு இது. இந்தத் தீவைத்தான் தற்போது சீனா குறி வைத்துள்ளது. இந்தத் தீவு நாட்டுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை அது உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், சாலமன் தீவுகள் நாட்டில் சீனா தனது படையை நிறுவுமாம்.
ரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் கசிந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சாலமன் தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் மனசே சோகவரே பேசுகையில், இந்த ஒப்பந்தம் தயாராக உள்ளது உண்மைதான். அதேசமயம், சீனா கடற்படை தளம் எல்லாம் அமைக்காது. அப்படிப்பட்ட நெருக்குதல் எல்லாம் நமக்கு இல்லை.
சாலமன் தீவில் கடற்படைத் தளத்தை அமைக்க நம்மை சீனா நெருக்குகிறது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் உண்மை இல்லை. நமது நாடு இறையாண்மை உள்ள நாடு. சுதந்திரமான நாடு. நம்மை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் மட்டுமே. நமது நாடுதான் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்ள சீனாவைக் கேட்டுக் கொண்டது. நம்மை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நண்பர்களுக்குள் நெருக்குதல் எல்லாம் கிடையாது என்றார் அவர்.
ஆனால் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் சாலமன் தீவுகளில் சீனா தனது படையை நிறுவ முடியும். தனது பாதுகாப்பு தளவாடங்களை கொண்டு வந்து வைக்க முடியும். கடற்படைப் போர்க் கப்பல்களை தீவுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று ஆஸ்திரேலியா தெரிவிக்கிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், இது ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு இடையூறான செய்தியாகும். இதுதொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுடன் தொடர்பில் உள்ளேன் என்றார் அவர்.
சீனாவுடன், சாலமன் தீவுகள் நெருங்கி வருவதை அந்த நாட்டிலேயே பலரும் விரும்பவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சாலமன் தீவுகளில் பெரும் வன்முறை வெடித்தது. தலைநகர் ஹோனய்ராவில் உள்ள சீனாடவுன் பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். 3 நாட்கள் மிகப் பெரிய வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
ஆஸ்திரேலியா, பிஜி, பாபுவா நியூகினி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அமைதி காக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு அமைதி திரும்பச் செய்யப்பட்டது. அதேசமயம், பிரதமர் சோகவரே தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஏற்கனவே சாலமன் தீவுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. சீனாவுக்கு எதிரான மன நிலையில் பெரும்பாலான மக்கள் உள்ள நிலையில் அந்த நாட்டுடன் பிரதமர் சோகவரே ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது மீண்டும் கலவரத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment