திருப்பூரில் ஆறு வயதுள்ள இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 67 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மகிளா கோர்ட் உத்தரவு
சேவூரில் ஆறு வயது இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேவூர் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறு வயதுடைய இரட்டை பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து இரு குழந்தைகளையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைக்கு பின் பிரகாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு தலா மூன்று பிரிவுகளில் 20 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 67 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இதேபோல, திருவள்ளூரில் கடந்த மார்ச் மாதம், 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 102 வயதான, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்ற பரசுராமன் (102) கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 99 வயது. இந்த நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், பரசுராமனுக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆண்டுகள் எளிய சிறைத் தண்டனை என அறிவிக்கப்பட்டு அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment