புதிய வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற பாமக அவசர செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று உத்தரவிட்டுள்ளது. வன்னியருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாமக அவசர செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், “தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் அந்த புள்ளி விவரங்களை தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதன் அடிப்படையில் புதிய வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட சமூகநீதிக் குழுவை அமைக்கவும் பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும். இதனை அவர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். மேலும், போராட்டங்கள் ஏதும் நான் அறிவிக்கப் போவதில்லை என்று ராமதாஸ் அப்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment